Blog

கவிமணி தேசிக விநாயகம்

3
Old Syllabus

கவிமணி தேசிக விநாயகம்

ஆசிரியர் குறிப்பு

இயற்பெயர் தேசிக விநாயகம்
பெற்றோர் சிவதாணுப்பிள்ளை – ஆதிலட்சுமி
ஊர் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில்
காலம் 27.07.1876 –  26.09.1954
துணைவியார் உமையம்மை
வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர் . பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சிவதாணுப்பிள்ளை – ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம். ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901 இல் மணம் முடித்தார். நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போல வளர்த்தார்.
ஆசிரியர் பணி
நாகர்கோவிலிலுள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
குழந்தை இலக்கியப் பணி
தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1938 ஆண்டு வெளியான அவருடைய மலரும் மாலையும் தொகுதியில் 25 க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்கள், 7 கதைப் பாட்டுகள் இடம்பெற்றிருந்தது. தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ள அவரது குழந்தைப் பாடல்களில் ஒன்று.
மொழிபெயர்ப்பாளர்
எட்வின் ஆர்னால்டின் Light of Asia வைத் தழுவித் தமிழில் ஆசிய ஜோதி எழுதினார். பாரசீகக்கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார். இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

ஆராய்ச்சியாளர்
ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் ‘மனோன்மணியம் மறுபிறப்பு’ என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். ‘காந்தளூர்ச்சாலை’ பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.
விருதுகள்
24 திசம்பர் 1940 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை கவிமணி என்ற பட்டம் வழங்கினார். 1943 இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1954 இல் கவிமணிக்குத் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

 

கவிமணியின் நூல்கள்
  • அழகம்மை ஆசிரிய விருத்தம்
  • ஆசிய ஜோதி (1941)
  • மலரும் மாலையும், (1938)
  • மருமக்கள்வழி மான்மியம் (1942)
  • கதர் பிறந்த கதை, (1947)
  • உமார் கய்யாம் பாடல்கள், (1945)
  • தேவியின் கீர்த்தனங்கள்
  • குழந்தைச்செல்வம்
  • கவிமணியின் உரைமணிகள்
  • காந்தளூர் சாலை
  • தோட்டத்தின் மீது வெள்ளை பசு
 பாடல்
 நேரிய உள்ளம் இரங்கிடுமேல்இந்த
நீள்நிலம் முற்றுமே ஆண்டிடலாம்;
பாரினில் மாரி பொழிந்திடவேவயல்
பக்குவ மாவது அறிந்திலீரோ ?
காட்டும் கருணை உடையவரேஎன்றும்
கண்ணிய வாழ்வை உடையவராம்;
வாட்டும் உலகில் வருந்திடுவார்இந்த
மர்மம் அறியாத மூடரையா!
காடு மலையெலாம் மேய்ந்துவந்துஆடுதன்
கன்று வருந்திடப் பாலையெல்லாம்
தேடிஉம் மக்களை ஊட்டுவதும்ஒரு
தீய செயலென எண்ணினீரோ ?
அம்புவி மீதில்இவ் ஆடுகளும்உம்மை
அண்டிப் பிழைக்கும் உயிரலவோ ?
நம்பி இருப்பவர் கும்பி எரிந்திடில்
நன்மை உமக்கு வருமோ ஐயா?
ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம்ஏழை
ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ ?
தீயவும் நல்லவும் செய்தவரைவிட்டுச்
செல்வது ஒருநாளும் இல்லை ஐயா!
ஆதலால் தீவினை செய்யவேண்டாஏழை
ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டா ;
பூதலந் தன்னை நரகம்அது ஆக்கிடும்
புத்தியை விட்டுப் பிழையும்ஐயா!
சொல்லும் பொருளும்
  • அஞ்சினார் – பயந்தனர்
  • கருணை – இரக்கம்
  • வீழும் – விழும்
  • ஆகாது – முடியாது
  • பார் – உலகம்
  • நீள்நிலம் – பரந்த உலகம்
  • முற்றும் – முழுவதும்
  • மாரி – மழை
  • கும்பி – வயிறு
  • பூதலம் – பூமி
 பாடலின் பொருள்
யாகசாலையில் நின்றவர் அனைவரும் புத்தர்பிரானைக் கண்டு நடுங்கினர். அவர் முன்னால் நிற்கவும் அஞ்சினர். கூடி இருந்த மக்களின் முன்னால் இரக்கமே உருவான புத்தர்பிரான் கூறிய உரையைக் கேளுங்கள். வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லார்க்கும் எளிய செயல். ஆனால், இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல்.  எல்லாரும் தம் உயிரைப் பெரிதாக மதித்துப் பாதுகாக்கின்றனர். எறும்பு கூடத் தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுவதை அறியாதவர் உண்டோ? நேர்மையான இரக்க மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையையும் ஆட்சி செய்ய முடியும். உலகில் மழை பெய்வதால் வயல் பக்குவம் அடைவதை அறியாதவர் உண்டோ? எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர். இந்த மறைபொருளை அறியாதவர் பிற உயிர்களை வருத்தித் தாமும் துன்புறுவர். காடுமலை எல்லாம் மேய்ந்து வருகிறது ஆடு. அது தன் குட்டி வருந்திடும் வகையில் பாலை எல்லாம் மக்களுக்குத் தருகிறது. இதனைத் தீயசெயல் என்று நீங்கள் கருதுகிறீர்களா? இந்த உலகில் ஆடுகளும் உங்களை நம்பி இருக்கும் உயிர்கள் அன்றோ? நம்மை நம்பி இருப்பவரின் வயிறு எரியும்வகையில் நடந்து கொள்வதால் உங்களுக்கு நன்மை கிடைக்குமா? ஆயிரம் பாவங்கள் செய்துவிட்டு, ஆட்டின் உயிரை எடுப்பதால் பாவங்கள் நீங்கி விடுமா? ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது.  ஆகையால், தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள். இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள்.
 பாடல்
உடலின் உறுதி உடையவரே
உலகின் இன்பம் உடையவராம்
இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ?
 சுத்த முள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு நீ அதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்
நீண்ட ஆயுள் பெறுவாயே!
 காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே.
 ஆளும் அரசன் ஆனாலும்
ஆகும் வேலை செய்வானேல்
நாளும் நாளும் பண்டிதர்கை
நாடி பார்க்க வேண்டாமே.
 கூழையே நீ குடித்தாலும்
குளித்த பிறகு குடி அப்பா!
ஏழையே நீ ஆனாலும்
இரவில் நன்றாய் உறங்கப்பா!
 மட்டுக் குணவை உண்ணாமல்
வாரி வாரித் தின்பாயேல்
திட்டு முட்டுப் பட்டிடுவாய்
தினமும் பாயில் விழுந்திடுவாய்.
 தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்தபின் உணவும்
நோயை ஓட்டி விடும் அப்பா!
நூறு வயதும் தரும் அப்பா!
 அருமை உடலின் நலமெல்லாம்
அடையும் வழிகள் அறிவாயே!
வருமுன் நோயைக் காப்பாயே
வையம் புகழவாழ்வாயே.
பாடல் விளக்கம்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள், இக்கவிதையில் உடலுக்கு நன்மை தருகின்ற வழிகளையும்,  தனிமனிதன் பின்பற்ற வேண்டிய ஒழுக்கமுறைகளையும் குறிப்பிட்டுச் செல்கின்றார். எவ்விதமான நோயும் தாக்காதவாறு உடலை உறுதியாக வைத்துக் கொள்பவர்களே   இந்த உலகில் நிலையான இன்பத்தை அடைகின்றனர். வசதி மிக்க இடங்களும், செல்வச் செழிப்பும் கொண்ட ஒருவன் நோயாளியாக  இருப்பின் அந்த வாழ்க்கை அவனுக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. நோய்கள் நம்மை அணுகாது இருக்க வேண்டுமாயின், நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள இடத்தை அனுதினமும் தூய்மையாக வைத்துக் கொள்ளப் பழகினால் நீண்ட ஆயுளைப் பெறலாம். கதிரவன் உதிக்கின்ற அதிகாலையிலும், கதிரவன் மறைகின்ற மாலைப் பொழுதிலும் தூய்மையான காற்று நிரம்பி இருக்கும். அச்சமயங்களில் உடற்பயிற்சி செய்தால் நம் உடலுக்கு நன்மை விளையும். நோய்கள் நம்மை நெருங்காது. வாழ்வில் எத்தகைய உயரத்தில் இருந்தாலும், அரசனாகவே வாழ்ந்தாலும், அவரவர் வேலையை அவரவரே செய்யப் பழகிக் கொண்டால், மருத்துவரின் உதவியை நாம் நாட வேண்டிய அவசியம் இருக்காது. எத்தகைய உணவாக இருந்தாலும் குளித்த பிறகே உணவு உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். இரவில் எவ்வித சலனமும் இன்றி நன்றாக உறங்க வேண்டும். மனம் விரும்புகின்றதே என்று எண்ணி, உணவுகளை வரைமுறையின்றி உண்ணுதல் கூடாது. அப்படி உண்டால் நோய்கள் தானாகவே நம்மை வந்தடையும். தூய்மையான காற்றும், தூய்மையான நீரும், நன்கு பசித்த பின் உண்ணுகின்ற உணவும் நோய்களை விரட்டிவிடும். நூறு வயது வரை  நோயின்றி வாழ்கின்ற வரத்தையும் தரும். உடலுக்கு நன்மை தருகின்ற வழிகள் எதுவோ அவற்றை முறையாக கடைபிடித்தால் நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்துடன் இந்த உலகம் புகழ வாழலாம். என்று கவிமணி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங்

காடும் செடியும் கடந்துவந்தேன்;

எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான்

இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்;

ஏறாத மேடுகள் ஏறிவந்தேன் – பல

ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;

ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் – மணல்

ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.

                                                    கவிமணி

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories