Blog

மகாத்மாகாந்தி

gandhi
Class 59 இந்தியாவின்‌ வரலாறு, பண்பாடு மற்றும்‌ இந்திய தேசிய இயக்கம்‌

மகாத்மாகாந்தி

மகாத்மாகாந்தி

காந்தியடிகள் உருவாகிறார்

குஜராத்தின் போர்பந்தரில் ஒரு வசதியான குடும்பத்தில் 1869 அக்டோபர் 2ஆம் நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தார். அவரது தந்தையார் காபா காந்தி, போர்பந்தரின் திவானாகவும் பின்னர் ராஜ்கோட்டின் திவானாகவும் பொறுப்பு வகித்தார். அவரது தாயார் புத்லிபாயின் தாக்கம் இளையவரான காந்தியின் நடவடிக்கைகளில் பெரிதும் இருந்தது. பதின்ம பள்ளிப் (மெட்ரிகுலேசன்) படிப்பை முடித்த காந்தியடிகள் சட்டம் பயில்வதற்காக 1888இல் இங்கிலாந்துக்குக் கடல்பயணம் மேற்கொண்டார். 1891ஆம் ஆண்டு ஜூன் மாதம் வழக்கறிஞர் பட்டம்பெற்ற பின்பு அவர் பிரிட்டிஷாரின் நீதி நியாய முறையில் நம்பிக்கை கொண்டவராக இந்தியாவுக்குத் திரும்பினார்.

தென்னாப்பிரிக்காவில் ஒரு செயல் உத்தியாக சத்தியாகிரகம்

காந்தியடிகள் உண்மையின் வடிவமாக சத்தியாகிரகத்தை மேம்படுத்தினார். நியாயமற்ற சட்டங்களுக்கு எதிராக அமைதிப் பேரணிகளை பரப்புரையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தாங்களாகவே முன்வந்து கைதானார்கள். குடியேற்றம் மற்றும் இனவேறுபாடு ஆகிய பிரச்சனைகளுக்காகப் போராட அவர் சத்தியாகிரக சோதனைகளை மேற்கொண்டார்.

இந்தியாவில் காந்தியடிகள் நடத்திய தொடக்ககால சத்தியாகிரகங்கள்

சம்பரான் சத்தியாகிரகம்

பீகாரில் உள்ள சம்பரானில் ‘தீன் காதியா’ முறை பின்பற்றப்பட்டது. இந்த சுரண்டல் முறையில் இந்திய விவசாயிகள் தங்களின் நிலத்தின் இருபதில் மூன்று பங்கு பகுதியில் அவுரி (இண்டிகோ) பயிரிட வேண்டும் என்று ஐரோப்பியப் பண்ணையாளர்கள் அவர்களைக் கட்டாயப்படுத்தினர். சட்டத்துக்கு புறம்பான நிலுவைத்தொகைகளை வசூலித்ததோடு வாடகையையும் அதிகரித்தார்கள். இந்த வகையில் சிரமங்களைச் சந்தித்த சம்பரானைச் சேர்ந்த விவசாயியான ராஜ்குமார் சுக்லா, சம்பரானுக்கு வருகை புரியுமாறு காந்தியடிகளைக் கேட்டுக்கொண்டார். சம்பரானை காந்தியடிகள் சென்று சேர்ந்தவுடன், அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு காவல்துறையினர் அவரைக் கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர் மறுத்ததையடுத்து வழக்கைச் சந்திக்குமாறு பணிக்கப்பட்டார். இந்தச் செய்தி காட்டுத்தீ போன்று பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கானோர் அந்த இடத்தில் காந்தியடிகளுக்கு ஆதரவாகக் கூடினர். நாடு முதன்முதலாக ஒத்துழையாமை இயக்கச் செயல்முறைப் பாடத்தைக் கற்றுக்கொண்டதாக காந்தியடிகள் தெரிவித்தார். இந்தியாவின் முதலாவது குடியரசுத்தலைவராக பின்னாளில் இராஜேந்திர பிரசாத்தும் வழக்குரைஞராக தொழில் செய்த பிரஜ்கிஷோர் பிரசாத்தும் காந்தியடிகளுக்குத் துணையாக செயல்பட்டனர். அதன்பிறகு துணைநிலை ஆளுநர் ஒரு குழுவை உருவாக்கினார் காந்தியடிகள் அக்குழுவில் ஒரு உறுப்பினர் ஆனார். இண்டிகோ பண்ணையாளர்கள் விவசாயிகள் மீது நடத்திய அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ‘தீன் காதியா’ முறையை ரத்து செய்ய அந்தக் குழு பரிந்துரைத்தது.

ரௌலட் சத்தியாகிரகமும் ஜாலியன்வாலா பாக் படுகொலையும்

பிடி உத்தரவு இல்லாமல் கைது நடவடிக்கை, விசாரணை இல்லாமல் சிறையிலடைப்பது என காவல் துறையினருக்கு அதீத அதிகாரங்களை ரௌலட் சட்டம் வழங்கியது. இந்தச் சட்டத்தை ‘கருப்புச் சட்டம்’ என்றழைத்த காந்தியடிகள் அதனை எதிர்த்து நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டத்துக்கு 1919 ஏப்ரல் 6இல் அழைப்புவிடுத்தார். இது உண்ணாவிரதமிருத்தல் மற்றும் பிரார்த்தனையுடன் கூடிய ஒரு அகிம்சை போராட்டமாக இருத்தல் வேண்டும். இது நாடு முழுவதும் பரவிய தொடக்ககால காலனிய எதிர்ப்பு போராட்டமாகும். ரௌலட் சட்டத்துக்கு எதிரான போராட்டம் பஞ்சாபில் குறிப்பாக அமிர்தசரஸ் மற்றும் லாகூரில் தீவிரமடைந்தது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டதுடன் பஞ்சாபிற்குள் நுழையவிடாமலும் தடுக்கப்பட்டார். ஏப்ரல் 9ஆம் நாள் டாக்டர். சைஃபுதீன் கிச்லு, டாக்டர். சத்யபால் என்ற இரண்டு முக்கிய உள்ளூர் தலைவர்கள் போராட்டத்திற்கு தலைமையேற்றதால் அமிர்தசரஸில் கைது செய்யப்பட்டனர்.

ஜெனரல் டயரின் கொடுங்கோன்மை

அமிர்தசரஸில் ஜாலியன்வாலா உள்ள பாக்கில் 1919 ஏப்ரல் 13ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பைசாகி திருநாளில் (சீக்கியர்களின் அறுவடைத்திருநாள்) இந்தக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அங்கு கூடியிருந்தனர். இந்தக்கூட்டம் பற்றி அறிந்தவுடன் அந்த இடத்தை பீரங்கி வண்டி மற்றும் ஆயுதமேந்திய வீரர்களுடன் ஜெனரல் ரெஜினால்டு டயர் சுற்றி வளைத்தார். உயர்ந்த மதில்களுடன் அமைந்த அந்த மைதானத்துக்கு இருந்த ஒரே வாயில் பகுதியை ஆக்ரமித்த ஆயுதமேந்திய வீரர்கள் எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றி கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார்கள். துப்பாக்கிகளில் குண்டுகள் தீரும் வரை தொடர்ந்து 10 மணித்துளிகளுக்கு இந்தத் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. அதிகாரபூர்வ அரசு தகவல்களின் படி 379 பேர் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர்; ஓராயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆனால் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை ஓராயிரத்துக்கும் அதிகம் என்று தெரிவித்தது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு படைத்துறைச்சட்டம் அறிவிக்கப்பட்டு பஞ்சாப் குறிப்பாக, அமிர்தசரஸ் மக்கள் சவுக்கடி கொடுக்கப்பட்டு தெருக்களில் ஊர்ந்து செல்ல  வைக்கப்பட்டனர். இந்தக் கொடுமைகள் இந்தியர்களை கொதித்தெழச்செய்தது. இரபீந்திரநாத் தாகூர் வீரத்திருமகன் (knighthood) என்ற அரசுப் பட்டத்தை திருப்பிக் கொடுத்தார். கெய்சர்-இ-ஹிந்த் பதக்கத்தை காந்தியடிகள் திருப்பிக்கொடுத்தார்.

கிலாபத் இயக்கம்

1918இல் முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்தது. இசுலாமிய மதத்தலைவர் என உலகம் முழுவதும் போற்றப்பட்ட துருக்கியின் கலிபா கடுமையாக நடத்தப்பட்டார். அவருக்கு ஆதரவாக தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே கிலாபத் இயக்கம் என்றழைக்கப்பட்டது. மௌலானா முகமது அலி மற்றும் மௌலானா சௌகத் அலி எனும் அலி சகோதரர்கள் தலைமையில் இவ்வியக்கம் நடந்தது. இந்த இயக்கத்துக்கு ஆதரவளித்த காந்தியடிகள் இந்த இயக்கத்தை இந்து முஸ்லீம்களை இணைக்க ஒரு வாய்ப்பாகக் கருதினார். 1919ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தில்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு அவர் தலைமையேற்றார். அல்லாஹூ அக்பர், வந்தே மாதரம், இந்து-முஸ்லீம் வாழ்க ஆகிய மூன்று தேசிய முழக்கங்களை முன்மொழிந்த சௌகத் அலியின் யோசனையை காந்தியடிகள் ஆதரித்தார். 1920 ஜூன் 9இல் அலகாபாத்தில் கூடிய கிலாபத் குழுவின் கூட்டம் காந்தியடிகளின் அகிம்சை மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தை ஏற்றுக்கொண்டது. ஒத்துழையாமை இயக்கம் 1920 ஆகஸ்டு முதல் நாள் தொடங்கியது.

ஒத்துழையாமை இயக்கம்

1920 செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் (அமர்வில்) இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கியது. பின்னர் 1920 டிசம்பர் மாதம் சேலம் C. விஜயராகவாச்சாரியாரின் தலைமையில் நாக்பூரில் நடந்த அமர்வில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒத்துழையாமை இயக்கத் திட்டத்தின் கூறுகளாவன;

  1. பட்டங்கள் மற்றும் மரியாதை நிமித்தமான பதவிகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைப்பது.
  1. அரசின் செயல்பாடுகளில் ஒத்துழைக்காமலிருப்பது.
  1. நீதிமன்ற வழக்குகளில் வழக்குரைஞர்கள் ஆஜராகாமல் இருப்பது. நீதிமன்றத்தில் இருந்த வழக்குகளுக்கு தனியார் மத்தியஸ்தம் மூலமாகத் தீர்வு காண்பது.
  1. அரசுப் பள்ளிகளை குழந்தைகளும் அவற்றின் பெற்றோர்களும் புறக்கணிப்பது.
  1. 1919 ஆண்டு சட்டத்தின் உருவாக்கப்பட்ட புறக்கணிப்பது. கீழ் சட்டப்பேரவைகளை புறக்கணிப்பது.
  1. அரசு விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் இதர அரசு விழாக்களில் பங்கேற்பதில்லை என்ற முடிவு.
  1. குடிமைப்பணி (சிவில்) அல்லது இராணுவப் பதவிகளை ஏற்க மறுப்பது.
  1. அந்நியப் பொருள்களின் புறக்கணிப்பு மற்றும் உள்ளூர் பொருள்களுக்கு ஊக்கம் தரும் சுதேசி இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புவது.

 

வரிகொடா இயக்கம் 

1922 பிப்ரவரி மாதம் பர்தோலியில் வரிகொடா இயக்க பிரச்சாரத்தை காந்தியடிகள் அறிவித்தார். இந்த இயக்கங்கள் ஒரு தேசியத் தலைவராக காந்தியடிகளின் நற்பெயரைப் பெரிதும் மேம்படுத்தின, குறிப்பாக விவசாயிகள் மத்தியில் ஒரு மாபெரும் தலைவராக அவரது மரியாதையை உயர்த்தின. காந்தியடிகள் நாடுதழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அவர் பயணம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் அந்நியத் துணிகள் குவிக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கானவர்கள் அரசு வேலைகளைத் துறந்தனர், மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் தங்கள் கல்வியைக் கைவிட்டனர், பெருமளவிலான வழக்குரைஞர்கள் தங்கள் தொழிலை கைவிட்டனர். ஆங்கிலேயப் பொருள்கள் மற்றும் நிறுவனங்கள் புறக்கணிப்புத் தீவிரமாக நடந்தது. வேல்ஸ் இளவரசரின் இந்தியப் பயணத்தை புறக்கணிப்பது வெற்றிகரமாக நடந்துமுடிந்தது.

சௌரி சௌரா சம்பவம்

1922 பிப்ரவரி 5ஆம் நாள் தற்போதைய உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அருகே சௌரி சௌரா என்ற கிராமத்தில் தேசியவாதிகள் நடத்தியப் பேரணி காவல்துறையினரின் கோபமுட்டும் நடவடிக்கைகளினால் வன்முறையாக மாறியது. தாம் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதை உணர்ந்த காவல்துறையினர் பாதுகாப்புக்காக தங்களை காவல்நிலையத்துக்குள் அடைத்துக் கொண்டனர். ஆனால் ஆத்திரம்கொண்ட கூட்டத்தினர் 22 காவலருடன் காவல்நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவலர்களும் உயிரிழந்தனர். காந்தியடிகள் உடனடியாக இயக்கத்தை திரும்பப்பெற்றார்.

சுயராஜ்ஜியக் கட்சியினர்

காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. அவையாவன, மாற்றத்தை விரும்புவோர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பாதவர்கள் என இரண்டு பிரிவுகள் ஆகும். மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ் ஆகியோர் தலைமையிலான காங்கிரசார் தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என்று விரும்பினார்கள். சட்டப் பேரவைகளில் பங்கேற்று பணியாற்றுவதன் மூலம் மட்டுமே தேசநலன்கள் மேம்படும் என்றும் இரட்டை ஆட்சியில் பங்கேற்பதன் மூலம்தான் காலனி ஆதிக்க அரசை பாதிப்படைய வைக்க முடியும் என்றும் அவர்கள் வாதிட்டனர். அவர்களே மாற்றத்தை விரும்புவோர்கள் என்று அழைக்கப்பட்டனர். வல்லபாய் பட்டேல், சி. ராஜாஜி உள்ளிட்ட காந்தியடிகளைத் தீவிரமாகப் பின்பற்றிய பலர் மாற்றத்தை விரும்பாதவர்களாக அரசுடன் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடர விரும்பினார்கள். எதிர்ப்புக்கு இடையே மோதிலால் நேருவும் சி.ஆர். தாஸும் 1923 ஜனவரி முதல் நாள் சுயராஜ்ஜியக் கட்சியை தொடங்கினார்கள். இந்தக் கட்சி பின்னர் காங்கிரஸ் கட்சியின் சிறப்பு அமர்வில் அங்கீகரிக்கப்பட்டது. ஆங்கிலேய இந்தியாவின் பேரரசு (இம்பீரியல்) சட்டப் பேரவை மற்றும் பல்வேறு மாகாண சட்டப்பேரவைகளுக்கு பெரும் எண்ணிக்கையில் சுயராஜ்ஜிய கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேசியவாதக் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்ல அவர்கள் சட்டப்பேரவையை ஒரு மேடையாகப் பயன்படுத்தினார்கள். வங்காளத்தில் அரசுடன் ஒத்துழைக்க விரும்பாததால் இந்தியர்களுக்கு என மாற்றப்பட்ட துறைகளில் பொறுப்பேற்க அவர்கள் மறுத்துவிட்டனர். காலனி அரசின் உண்மையான இயல்பை அவர்கள் வெளிக்கொணர்ந்தனர். எனினும் 1925 அக்கட்சியின் தலைவர் சி.ஆர். தாஸ் மறைந்த பிறகு சுயராஜ்ஜிய கட்சி வீழ்ச்சி காணத் தொடங்கியது.

1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மூலமாக இரட்டை ஆட்சி என்பது அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் மாகாண அரசின் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட துறைகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டது. நிதி, பாதுகாப்பு, காவல்துறை, நீதித்துறை, நிலவருவாய், மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகள் ஆங்கிலேயர்கள் வசம் ஒதுக்கப்பட்டன. மாற்றப்பட்ட துறைகளில் உள்ளாட்சி, கல்வி, பொதுசுகாதாரம், பொதுப்பணி, வேளாண்மை, வனங்கள், மற்றும் மீன்வளத்துறை ஆகியன இந்திய அமைச்சர்களின் கட்டுப்பாட்டின் கீழ் விடப்பட்டன. 1935ஆம் ஆண்டு மாகாண சுயாட்சி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்த முறை முடிவுக்கு வந்தது.

காந்தியடிகளின் ஆக்கப்பூர்வத் திட்டம்

சௌரி சௌரா நிகழ்வுக்குப் பிறகு ஆர்வலர்களும் மக்களும் அகிம்சை போராட்டம் குறித்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று காந்தியடிகள் உணர்ந்தார். அதன் ஒருபகுதியாக காதி இயக்க மேம்பாடு, இந்து-முஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தினார். “உங்கள் மாவட்டங்களுக்குச் செல்லுங்கள். கதர், இந்து-முஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு ஆகியன பற்றிய செய்திகளைப் பரப்புங்கள். இளைஞர்களை ஒன்றுதிரட்டி அவர்களை சுயராஜ்யத்தின் உண்மையான வீரர்களாக உருமாற்றுங்கள்.” என்று காந்தியடிகள் காங்கிரசாருக்கு அறிவுறுத்தினார். காங்கிரஸ் உறுப்பினர்கள் கதர் உடுப்பதை அவர் கட்டாயமாக்கினார். அகில இந்திய நெசவாளர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

சைமன் குழு புறக்கணிப்பு

1927 நவம்பர் 8ஆம் நாள் இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்டபூர்வ ஆணையம் (Indian Statutory Commission) நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. சர் ஜான் சைமன் தலைமையிலான இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம்பெற்றனர். இந்தியர்கள்எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாக இந்தக் குழுவில் இடம்பெற்றனர். இந்தியர்கள் ஆத்திரமும் அவமானமும் அடைந்தனர். தங்கள் அரசியல் சாசனத்தை நிர்ணயிக்க தங்களுக்கு உரிமை இல்லாத நிலைகண்டு கொதித்தனர். காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் – லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய பிரிவுகளும் இந்த சைமன் குழுவினைப் புறக்கணிப்பது என முடிவு செய்தன. இந்தக் குழு சென்ற இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்களும், கருப்புக்கொடி ஏந்தியபடி ‘சைமனே திரும்பிப் போ’ எனும் முழக்கங்களும் இடம்பெற்றன. போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டனர். அவ்வாறு நடந்த ஒரு கடுமையான தாக்குதலில் லாலா லஜபதி ராய் மிக மோசமாக காயமடைந்து பின்னர் சில நாட்களில் உயிரிழந்தார்.

நேரு அறிக்கை

இந்தியாவில் இருந்த பல்வேறு அரசியல் கட்சிகளை சைமன் குழு  புறக்கணிப்பு ஒன்றிணைத்தது. சைமன் குழு முன்மொழிவுகளுக்கு மாற்றாக இந்தியாவுக்கு அரசியல் சாசனம் உருவாக்குவதை குறிக்கோளாகக் கொண்டு 1928இல் அனைத்துக் கட்சி மாநாடு நடைபெற்றது.  மோதிலால் நேரு தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டியின் அறிக்கை ‘நேரு அறிக்கை’ என்று அழைக்கப்பட்டது. அதில் பரிந்துரை செய்யப்பட்டவை:

  • இந்தியாவுக்கு தன்னாட்சி அந்தஸ்து என்ற டொமினியன் தகுதி.
  • மத்திய சட்டப் பேரவை மற்றும் மாகாண சட்டப் பேரவைகளுக்கு கூட்டு மற்றும் கலவையான வாக்காளர் தொகுதிகளுடன் தேர்தல் நடைபெறுவது.
  • மத்திய சட்டப் பேரவை மற்றும் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள மாகாண சட்ட பேரவைகளில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அதேபோல் இந்துக்களுக்கு அவர்கள் சிறுபான்மையினராக உள்ள வடமேற்கு எல்லை மாகாணத்தில் இடஒதுக்கீடு.
  • பொது வாக்களிப்பு முறையும் அடிப்படை உரிமைகளும் வழங்கப்படுவது.

மத்திய சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஜின்னா சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தார். மூன்றில் ஒருபங்கு இடங்கள் முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார். அவரை ஆதரித்த தேஜ் பஹதூர் சாப்ரூ இது பெரும் மாற்றத்தைத் தராது என்று வேண்டினார். எனினும், அனைத்துக் கட்சி மாநாட்டில் இவை அனைத்தும் தோல்வி கண்டன. பின்னர், ஜின்னாவின் 14 அம்சங்கள் என்று அழைக்கப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்தார். எனினும் அதுவும் நிராகரிக்கப்பட்டது. இந்து- முஸ்லீம் ஒற்றுமையின் தூதராக பாராட்டப்பட்ட ஜின்னா பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு முஸ்லீம்களுக்கு தனிநாடு என வலியுறுத்த ஆரம்பித்தார்.

முழுமையான சுயராஜ்ஜியத்துக்கானபோராட்டம் மற்றும் சட்டமறுப்பு இயக்கத் தொடக்கம்

இதனிடையே டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து திருப்தி அடையாத காங்கிரசார் சிலர், முழுமையான சுதந்திரம் வேண்டி கோரிக்கை வைத்தனர். 1929இல் டிசம்பர் மாதம் லாகூரில் ஜவகர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் அமர்வு நடந்தது. அதில் முழுமையான சுதந்திரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது. வட்டமேசை மாநாட்டை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டதுடன், சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. 1930 ஜனவரி 26ஆம் நாள் சுதந்திரத் திருநாளாக அறிவிக்கப்பட்டு வரிகொடா இயக்கம் உள்ளிட்ட சட்டமறுப்பு இயக்கம் மூலமாகவும் வன்முறையற்ற முறையில் முழுமையான சுதந்திரத்தை அடைவது குறித்தும் நாடு முழுவதும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த இயக்கத்தைத் தொடங்க இந்திய தேசிய காங்கிரஸ் காந்தியடிகளுக்கு அங்கீகாரம் அளித்தது.

உப்பு சத்தியாகிரகம்

1930 ஜனவரி 31ஆம் நாளுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற காலக்கெடுவுடன் அரசப்பிரதிநிதி (வைசிராய்) இர்வின் பிரபுவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது. அவை கீழ்க்கண்டவையாகும்:

  • இராணுவம் மற்றும் ஆட்சிப்பணி சேவைகளுக்கான செலவுகளை 50 சதவிகிதம் வரை குறைப்பது.
  • முழுமையான புறக்கணிப்பை அறிமுகம் செய்வது.
  • அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வது.
  • நிலவருவாயை 50 சதவிகிதமாக குறைப்பது.
  • உப்பு வரியை ரத்துசெய்வது.

கோரிக்கை மனுவுக்கு அரசப்பிரதிநிதி பதில் தெரிவிக்காத நிலையில் காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கினார். உப்பு மீதான வரியை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒரு அறிவுபூர்வமான முடிவாகும். காந்தியடிகள் 1930 மார்ச் மாதம் 12ஆம் நாள் 78 பேர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரையைத் தொடங்கினார். இந்த யாத்திரையில் நூற்றுக்கணக்கானோர் சேரச்சேர அது நீண்டுகொண்டே போனது. காந்தியடிகள் தனது 61 ஆவது வயதில் 24 நாட்களில் 241 மைல் தொலைவு யாத்திரையாக நடந்து சென்று 1930 ஏப்ரல் 5ஆம் நாள் மாலை தண்டி கடற்கரையை அடைந்தார். அடுத்த நாள் காலை ஒரு கைப்பிடி உப்பைக் கையில் எடுத்து உப்புச்சட்டத்தை மீறினார்.

மாகாணங்களில் உப்பு சத்தியாகிரகம்

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் இருந்து வேதாரண்யம் வரை இதேபோன்ற ஒரு யாத்திரையை சி. ராஜாஜி மேற்கொண்டார். கேரளா, ஆந்திரா மற்றும் வங்காளத்திலும் உப்பு சத்தியாகிரக யாத்திரை நடந்தன. வடமேற்கு எல்லை மாகாணத்தில் கான் அப்துல் கஃபார்கான் என்பவர் இந்த இயக்கத்திற்குத் தலைமை ஏற்றார். செஞ்சட்டைகள் என்றழைக்கப்பட்ட குடை கிட்மட்கர்’ இயக்கத்தை அவர் நடத்தினார்.

காந்தியடிகள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். ஜவகர்லால் நேரு, கான் அப்துல் கஃபார்கான் மற்றும் இதர தலைவர்கள் விரைவாக கைதானார்கள். அந்நிய துணிகள் புறக்கணிப்பு, மதுக்கடைகள் முன் ஆர்ப்பாட்டங்கள், வரி கொடா இயக்கம், வனச்சட்டங்களை பின்பற்ற மறுப்பது ஆகியன உள்ளிட்ட பல ஆர்ப்பாட்ட வடிவங்கள் பின்பற்றப்பட்டன. பெண்கள், விவசாயிகள், பழங்குடியினர்,மாணவர்கள்மற்றும் குழந்தைகளும் என சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்றனர். இந்தியா சந்தித்த மக்கள் இயக்கங்களிலேயே இது மிகப் பெரியது.

வட்டமேசை மாநாடு

1930ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டனில் முதலாவது வட்ட மேசை மாநாடு நடந்தது. பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு மாகாண சுயாட்சியுடன் கூடிய மத்திய அரசு பற்றிய யோசனையை அறிவித்தார். காங்கிரசின் தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்ததால் இந்த வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை. இந்தப் பிரச்சனை குறித்து எந்தவித முடிவும் எட்டப்படாமலேயே மாநாடு நிறைவடைந்தது.

காந்தி-இர்வின் ஒப்பந்தம்

காந்தியடிகளுடன் அரசப்பிரதிநிதி இர்வின் பிரபு பேச்சுவார்த்தைகளை நடத்தியதையடுத்து 1931 மார்ச் 5ஆம் நாள் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. வன்முறையில் ஈடுபடாத அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது, கைப்பற்றப்பட்ட நிலத்தைத் திரும்பத் தருவது, பதவி விலகிய அரசு ஊழியர்கள் விஷயத்தில் நீக்குபோக்காக நடந்துகொள்வது ஆகிய கோரிக்கைகளை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொண்டது. கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பயன்பாட்டுக்காக உப்புக் காய்ச்சவும் வன்முறை இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யவும் இந்த ஒப்பந்தம் வகைசெய்தது. சட்டமறுப்பு இயக்கத்தை ரத்து செய்துவிட்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டது. 1931 செப்டம்பர் 7ஆம் நாள் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் கலந்துகொண்டார். சிறுபான்மையினருக்கு தனித்தொகுதிகள் வழங்குவதை காந்தியடிகள் ஏற்கவில்லை. இதன் விளைவாக, இரண்டாவது வட்டமேசை மாநாடு எந்தவித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

சட்டமறுப்பு இயக்கத்திற்கு புத்துயிரூட்டல்

இந்தியா திரும்பிய பிறகு காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டினார். இந்தமுறை அரசு எதிர்ப்பை சமாளிக்க ஆயத்தமாக
இருந்தது. படைத்துறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு 1932 ஜனவரி 4ஆம் நாள் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். விரைவில் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, 1932ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் முதல் டிசம்பர் 24ஆம் நாள் வரை மூன்றாவது வட்டமேசை மாநாடு நடத்தப்பட்டது. சட்டமறுப்பு இயக்கத்திற்கு புத்துயிரூட்டியதால் காங்கிரஸ் கட்சி இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.

வகுப்புவாரி ஒதுக்கீடு மற்றும் பூனா ஒப்பந்தம்

1932 ஆகஸ்டு 16ஆம் நாள் வகுப்புவாரி ஒதுக்கீட்டை ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராகிய B.R. அம்பேத்கர்,தமது கருத்துப்படி தனித்தொகுதிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரத்தை வழங்கும் என்று வாதிட்டார். 1932 செப்டம்பர் 20ஆம் நாள் காந்தியடிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் ஒதுக்கீட்டிற்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்தை தொடங்கினார். மதன் மோகன் மாளவியா, ராஜேந்திர பிரசாத் மற்றும் பல தலைவர்கள் B.R.அம்பேத்கர் மற்றும் M.C. ராஜா மற்றும் இதர ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் இடையே ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது. இதுவே பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. அதன் முக்கிய விதிமுறைகள்:

  • தனித்தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன. மாறாக, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் கூட்டுத்தொகுதிகள் பற்றிய யோசனை ஏற்கப்பட்டது.
  • ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71 லிருந்து 148 ஆக அதிகரிக்கப்பட்டது. மத்திய சட்டப் பேரவையில் 18 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டன.

தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரம்

அம்பேத்கர் உடனான அவரது தொடர்புகள் சாதி அமைப்புகள் பற்றிய காந்தியடிகளின் கருத்துக்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் தமது இருப்பிடத்தை வார்தாவில் இருந்த சத்தியாகிரக ஆசிரமத்துக்கு மாற்றினார். அரிஜனர்களுக்கான பயணம் என்ற நாடுதழுவிய பயணத்தை காந்தியடிகள் மேற்கொண்டார். அரிஜனர் சேவை சங்கத்தை அமைத்து சமூகத்தில் உள்ள பாகுபாடுகளை முழுமையாக அவர் அகற்றுவதற்குப் பணியாற்றத் தொடங்கினார். கல்வி, சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தவும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே மதுப் பழக்கத்தை கைவிடவும் அவர் பணியாற்றினார். கோயில் நுழைவுப் போராட்டம் என்பது இந்தப்பிரச்சாரத்தின் முக்கியமான பகுதியாகும். 1933 ஜனவரி 8ஆம் நாள் ‘கோவில் நுழைவு நாள்’ என அனுசரிக்கப்பட்டது.

கிரிப்ஸ் தூதுக்குழு

1942 மார்ச் 22ஆம் நாள் அமைச்சரவை (காபினட்) அமைச்சர் சர் ஸ்ட்ராஃபோர்டு கிரிப்ஸ் தலைமையில் ஒரு தூதுக்குழுவை பிரிட்டிஷ் அரசு அனுப்பியது. உரிய அதிகாரத்தை உடனடியாக மாற்றித்தர பிரிட்டன் விருப்பப்படாத நிலையில் காங்கிரஸ் மற்றும் கிரிப்ஸ் தூதுக்குழு இடையேயான பேச்சுகள் தோல்வி அடைந்தன. கிரிப்ஸ் தூதுக்குழு கீழ்க்கண்டவற்றை வழங்க முன்வந்தது.

  • போருக்குப் பிறகு தன்னாட்சி (டொமினியன் தகுதி) வழங்குவது.
  • பாகிஸ்தான் உருவாக்க கோரிக்கையை ஏற்கும் விதமாக இந்திய இளவரசர்கள் பிரிட்டிஷாருடன் தனி ஒப்பந்தத்தைக் கையெழுத்திடலாம்.
  • போரின் போது பாதுகாப்புத் துறை பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருப்பது.

காங்கிரஸ், முஸ்லீம் லீக் இரண்டுமே இந்தத் திட்ட அறிக்கையை நிராகரித்து விட்டன. திவாலாகும் வங்கியில் பின் தேதியிட்ட காசோலை என காந்தியடிகள் இந்த திட்டங்களை அழைத்தார்.

காந்தியடிகளின் “செய் அல்லது செத்து மடி” முழக்கம்

பம்பாயில் 1942 ஆகஸ்டு மாதம் 8ஆம் நாள் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெள்ளையனே வெளியேறு தீர்மானத்திற்கு வித்திட்டதுடன் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு உடனடியாக முடிவு கட்ட கோரிக்கை வைத்தது. செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்தை காந்தியடிகள் வெளியிட்டார். “நாம் நமது முயற்சியின் விளைவாக இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவோம், அல்லது நாம் நமது அடிமைத்தனத்தைக் காண உயிருடன் இருக்கமாட்டோம்”, என்று காந்தியடிகள் கூறினார். காந்தியடிகளின் தலைமையின் கீழ் அகிம்சையான மக்கள் போராட்டம் தொடங்கப்பட இருந்தது. ஆனால் அடுத்த நாள் காலை அதாவது 9 ஆகஸ்டு 1942 அன்று காந்தியடிகளும் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

விடுதலையை நோக்கி

ராயல் இந்திய கடற்படைக் கிளர்ச்சி

1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பம்பாயில் ராயல் இந்திய கடற்படை மாலுமிகள் கிளர்ச்சி செய்தனர். விரைவில் அங்கிருந்து வேறு நிலையங்களுக்கும் பரவிய இந்த கிளர்ச்சியில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட மாலுமிகள் ஈடுபட்டனர். இதேபோன்று ஜபல்பூரில் இருந்த இந்திய விமானப்படை, இந்திய சமிக்ஞை (சிக்னல்) படை ஆகியவற்றிலும் வேலைநிறுத்தங்கள் செய்தனர்

சுதந்திரம் பற்றிய பேச்சுவார்த்தை: சிம்லா மாநாடு

1945ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் நாள் வேவல் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்ததிட்டம் மூலமாக அரசப்பிரதிநிதியின் செயற்குழுவில் இந்துக்களும் முஸ்லீம்களும் சம எண்ணிக்கையில் இடம்பெற்ற ஓர் இடைக்கால அரசுக்கு வகை செய்யப்பட்டது. போர் தொடர்பான துறை தவிர்த்து அனைத்து இதர துறைகளும் இந்திய அமைச்சர்கள் வசம் கொடுக்கப்பட இருந்தன. எனினும் சிம்லா மாநாட்டில் காங்கிரசும் முஸ்லீம்லீக்கும் ஓர் ஒப்பந்தத்தை எட்டமுடியவில்லை. அனைத்து முஸ்லீம் உறுப்பினர்களும் முஸ்லீம் லீக்கில் இருந்துதான் இடம்பெற வேண்டும் மற்றும் அவர்கள் அனைத்து முக்கிய விஷயங்களிலும் வீட்டோ அதிகாரங்களையும் பெறவேண்டும் என்று ஜின்னா கோரினார். 1946ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடந்த மாகாணத் தேர்தல்களில் பொதுத்தொகுதிகளில் பெரும்பாலானவையை காங்கிரஸ் வென்றது. முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முஸ்லீம் லீக் வென்று தனது கோரிக்கைக்கு வலுசேர்த்தது.

அமைச்சரவைத் தூதுக்குழு

பெதிக் லாரன்ஸ், சர் ஸ்டராஃபோர்ட் கிரிப்ஸ், A.V. அலெக்ஸாண்டர் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்பினார். பாகிஸ்தானை தனிநாடாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த அக்குழுவினர் பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் வெளியுறவு ஆகிய துறைகளில் கட்டுப்பாட்டுடன் கூடிய மத்திய அரசை நிறுவ வகைசெய்தது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இல்லாத மாகாணங்கள், வடமேற்கில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள், மற்றும் வடகிழக்கில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள் என மூன்றுவகையாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. இந்திய அரசியல் சாசன நிர்ணயமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து சமூகங்களில் இருந்தும் பிரதிநிதித்துவம் கொண்ட இடைக்கால அரசு நிறுவப்பட வேண்டும். இந்த திட்டத்தை காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் ஏற்றுக்கொண்டன.

நேரடி நடவடிக்கை நாளுக்கு முஸ்லீம் லீக் அழைப்பு விடுத்தல்

காங்கிரஸ் ஒரு முஸ்லீம் உறுப்பினரை நியமித்ததை அடுத்து காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவின. தான் மட்டுமே முஸ்லீம்களின் பிரதிநிதியாக இருக்கவேண்டும் என்று வாதிட்ட முஸ்லீம் லீக் தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. 1946ஆம் ஆண்டு ஆகஸ்டு 16ஆம் நாளை ‘நேரடி நடவடிக்கை நாளாக’ ஜின்னா அறிவித்தார். ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்பு போராட்டங்களும் நடந்தது விரைவில் அது இந்து-முஸ்லீம் மோதலாக உருவெடுத்தது. இது வங்காளத்தின் இதர மாவட்டங்களுக்கும் பரவியது. நவகாளி மாவட்டம் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டது.

மவுண்ட்பேட்டன் திட்டம்

ஜவகர்லால் நேரு தலைமையில் இடைக்கால அரசு 1946ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது. சில தயக்கங்களுக்குப் பிறகு முஸ்லீம் லீக் இந்த இடைக்கால அரசில் 1946ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இணைந்தது. அதன் பிரதிநிதி லியாகத் அலிகான் நிதி உறுப்பினராக ஆக்கப்பட்டார். 1948ஆம் ஆண்டு ஜூன் மாதவாக்கில் அதிகாரமாற்றம் ஏற்படும் என்று 1947ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிளெமன்ட் அட்லி அறிவித்தார். இந்த ஆட்சிமாற்றத்தை உறுதி செய்யும் பொறுப்புடன் மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவுக்கு அரசுப் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார். 1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் நாள் மவுண்ட்பேட்டன் திட்டம் அறிவிக்கப்பட்டது. கீழ்க்கண்டவை அதில் கூறப்பட்ட அம்சங்கள்:

  • இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு, பிரிட்டனின் தன்னாட்சிப் பகுதி (டொமினியன்) என்ற தகுதியுடன் அதிகாரமாற்றம் நடைபெறும்.
  • சிற்றரசுகள் இந்தியா அல்லது பாகிஸ்தானில் சேரவேண்டும்.
  • ராட்கிளிஃப் பிரவ்ன் தலைமையில் எல்லைகளை நிர்ணயிக்கும் ஆணையம் அமைக்கப்பட்டு அதிகாரமாற்றத்துக்குப் பிறகு இந்த ஆணையத்தின் முடிவு அறிவிக்கப்படும்.
  • பஞ்சாப் மற்றும் வங்காள சட்டப்பேரவைகள் அவைகள் பிரிக்கப்படவேண்டுமா என்பது பற்றி வாக்கெடுப்பு நடத்தும்.

விடுதலையும் பிரிவினையும்

1947ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்திய விடுதலைச் சட்டத்தை இயற்றியதையடுத்து மவுண்பேட்டன் திட்டத்துக்கு செயல்வடிவம் தரப்பட்டது. இந்தியாவின் மீதான ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இறையாண்மையை இந்தச் சட்டம் ரத்து செய்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு பகுதிகளாக இந்தியா பிரிக்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள் இந்தியா விடுதலை அடைந்தது.

 

ரெளலட் சட்டத்தை ஆங்கில அரசு 1919-ல் நடைமுறைப்படுத்தியது

1919 ஆம்‌ ஆண்டு பிப்ரவரி மாதம்‌ காந்தியடிகள்‌‌ ரெளலட்‌ சட்டம்‌ எதிர்த்துப்‌ போராட்ட கருத்தாய்வுக்‌ கூட்டம்‌ இராஜாஜியின்‌ வீட்டில்‌ நடைபெற்றது.

1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார். செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார். அப்போது காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகைள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா? என்று சிந்தித்தார். அன்றுமுதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தாெடங்கினார். அவரது தாேற்த்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்டுத்திய பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. அந்தக் கோலத்திலேயே தம் வாழ்நாள் முழுவதும் இருந்தார். உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் இதுவாகும்

காந்தியடிகள் தமக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பலமுறை கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழியை கற்கத் தொடங்கியுள்ளதாகத் கூறியுள்ளார். ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். திருக்குறள் அவரைக் கவர்ந்த நூலாகும்.

1937 ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சாமிநாதர் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தார். உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார். ”இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறினார் காந்தியடிகள். இந்நிகழ்வுகள் மூலம் ஏற்றத்தாழ்வு அற்ற சமுதாயம் மலர வேணடும் என்னும் காந்தியடிகளின் உள்ள உறுதியை அறிந்து கொள்ளலாம்.

  • காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் ஆற்றிய உரையை குழந்தைகளுக்கு கூறினார். பயிற்றுமொழியைக் குறித்துச் சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது, அடித்தளம் இல்லாமல் கட்டத்தை எழுப்புவதைப் போன்றது என்றார்.
  • “கவி இரவீந்திரநாத் தாகூரின்” ஈர்ப்பான இலக்கிய நடையின் உயர்வுக்குக் காரணம் தம்முடைய தாய்மொழியில் அவருக்கு இருந்த பற்றதல் தான்.
  • உயர்ந்த மனம் படைத்த மதன்மோகன் மாளவியாவின் ஆங்கிலப்பேச்சு வெள்ளியை போன்ற ஒளிவிட்டாலும், அவரது தாய்மொழிப் பேச்சு, தங்கத்தை போன்று ஒளி வீசுகின்றது என்றார்.
  • “வேலை தெரியாத தொழிலாளி, தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம்” என்ற ஆங்கிலப் பழமொழி உண்டு. “ஜெகதீஷ் சந்திரபோஸ், பி.சி.இராய் முதலியோரின் சாதனைகளைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் தாய்மொழி மூலம் நமக்குக் கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும் இராய்களும் தோன்றியிருப்பார்கள்.
  • காந்தியடிகளின் கூற்றுப்படி தாய்மொழியைக் கற்பித்தல் மொழியாக வைத்துக்காெண்டால், ஆங்கிலத்தின் அறிவைப் பெறுவது பாதிக்கப்படுமா, இல்லையா என்பதைப் பற்றிச் சிந்தனை செய்ய வேண்டிய தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
  • படித்த இந்தியர்கள் அனைவரும் அயல் மொழியில் பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. இந்த அயல் மொழியிடம் ஒரு பற்றுதலைத் தோற்றுவிப்பதோ, ஊாக்கம் அளிப்பதோ தேவையில்லை.
  • பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும். (இந்த கடிதம் 1917-ம் ஆண்ட புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரையாகும்)

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories