முடியரசன்
August 14, 2023 2025-03-07 5:23முடியரசன்
வீறுகவியரசர் முடியரசன்:
இயற்பெயர் | துரைராசு |
பெற்றோர் | சுப்பராயலு – சீதாலக்ஷ்மி |
ஊர் | தேனி மாவட்டம் (பெரியகுளம் ) |
காலம் | 07.10.1920 – 12.03.1998 |
தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெருமதிப்பைப் பெற்ற திராவிட இயக்கத்தின் முன்னோடிக்கவிஞர். தம் கவிதையின்படியே வாழ்ந்துகாட்டிய கவிஞர்க்கு எடுத்துக்காட்டு இவர். சாதி-சமய, சாத்திரச் சடங்குகளை வெறுத்தவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். சென்னை, முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியிலும், காரைக்குடி மீ. சு. உயர்நிலைப்பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.
சிறப்பு
- அறிஞர் அண்ணா இவரைத் “தமிழ்நாட்டு வானம்பாடி” எனப் போற்றினார்.
- பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளார் இவருக்கு கவியரசு என்ற பட்டத்தை வழங்கினார்.
- இவரின் வகுப்பில் மாணவர்கள் எழுத்து நின்று வணக்கம் சொல்வதற்கு பதில் “வெல்க தமிழ்” என்று கூறிய பின்னரே வகுப்புகள் துவங்கும்.
- பூங்கொடி என்னும் காவியம் தமிழக அரசின் பரிசை பெற்றது.
- பாரதிதாசனாரால் ‘என் மூத்த வழித்தோன்றல், எனக்குப் பின் கவிஞன்’ என்று பாராட்டப்பெற்றவர்.
- தம் கவிதையின்படியே வாழ்ந்துகாட்டிய கவிஞர்க்கு எடுத்துக்காட்டு இவர். தான் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதோடு தம் பிள்ளைகள் அறுவர்க்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்வித்தவர்.
- குன்றக்குடி அடிகளார் = ‘சாதி ஒழியவேண்டும் எனக் கவிதையிலும், மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள் அவற்றைத் தன் வாழ்வில் கடைப்பிடித்தவர். கவியரசு முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை’ என்று போற்றினார்.
- மு.கருணாநிதி = திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர் – திராவிட இயக்கத்தின் ஈடு இணையற்ற தளகர்த்தர்களில் ஒருவர் – 1940க்குப் பின்னால் திராவிட இயக்கத்தின் சார்பில் நாற்பதுக்கும் மேற்பட்ட இதழ்களில் கொள்கை முழக்கம் செய்தவர் கவிஞர் முடியரசன். அதிலும் குறிப்பாக, முரசொலியிலும், முத்தாரத்திலும் அவர் கவிதை இடம் பெறாத நாளே இருக்க முடியாது. இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிறதென்றால் அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம்.
- எம்.ஜி.ஆர் = ‘கவிஞர் என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று முடியரசனார் அவர்களின் வாழ்க்கையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.’
- கா.அன்பழகன் = பாரதியார் என்ற வித்திலிருந்து முளைத்தது பாரதிதாசன் என்ற செடி. அச்செடியில் தழைத்தது முடியரசன் என்ற கொடி.
புரட்சிக் கவிஞர் பரம்பரையில் புத்துலக உணர்வு படைக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகளை வடிப்பதில் தேர்ந்தவர் கவிஞர் முடியரசனார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, வழியில் தன்மானச் சுடராகத் திகழ்ந்தவர். அவர் இயற்றிய கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும். கவிஞர்களிடையே ஓர் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் கவியரசர் முடியரசனார். - முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விஸ்வநாதம் = ‘இருபதாம் நூற்றாண்டின் இலக்கியவாதிகளுள் இணையற்றவர் கவியரசர் முடியசனார்’
- “பொன்னி” என்ற இதழில் இவரின் கவிதைகள் தொடர்ச்சியாக “பாரதிதாசன் பரம்பரை” என்ற பகுதியில் வெளிவந்தது
- ‘திராவிட நாட்டின் வானம்பாடி’ பட்டம் – பேரறிஞர் அண்ணா பாராட்டினார்.
- ‘பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்’ – தந்தை பெரியார் பாராட்டினார்.
- இதனால் இவரை “பொன்னியின் செல்வர்” என்று அழைத்தனர்.
- —————————————————————————————————————————————————————————————————————-
- வேத்தவைப் பாவலரும் வேற்று மொழிகலக்குந்தீத்திறக் காலை தெளி மருந்தே – மூத்தமுடியரச ரின்றி மொழிவனப்புச் செய்யும்முடியரசன் செய்யுண் முறை – தேவநேயப் பாவாணர் பாடினார்.
——————————————————————————————————————————————————————————————————————–
- பாடப் பிறந்த பழஞ்சபை மாணவன்மூடப் பழக்கஞ் சாடிய பாவலன்இலக்கியம் நிலமா இலக்கணம் அரணாக்கவிதை கோலாக் கற்பனை கொடியாவெல்க தமிழெனும் விறற்கொடி பொறியாயாப்புப் படையா நல்லணி துணையாப்புரட்சி முரசாப் புதுமை துடியாத்தமிழை இகழ்வார் தன்னுயிர் பகையாஅல்மொழி திணிப்பார் வல்வர வெதிர்த்துத்
தொடுமொழிப் போரில் தும்பை சூடியோன்
மொழியர சோச்சும் முதல்முடி யரசன்
குடியரசு போற்றுங் கொள்கை யோனே. – முனைவர் வ.சுப. மாணிக்கனார் பாடினார்.
————————————————————————————————————————————————————————————————————–
- முடியரசர் இவரென்றால் மக்க ளெங்கே? முன்னோடும பரி எங்கே ? படைக ளெங்கே?முடிஎங்கே? அரசெங்கே? முரச மெங்கே? முத்தமிழில் ஒரு தமிழ்தான் முடியோ மற்றஇடைத்தமிழ்தான் அரசோ மூன் றாவதான எழிற்றமிழ்தான முரசோ ஓ.. சரிதான் இந்தமுடியரசர் பாவரசர் பாடுகின்றார் நாம் முழங்காலை நிலந்தாழ்த்தி வணங்கிக் கேட்போம்மும்முடியை ஓர்தலையில் முடித்த முடியரசர்
எம்முடியும் தலைவணங்கும் இயற்கையிலே கவிஞர்
தம்மரிய கவிதையினால் கவியரசர் ஆனார்
தாய்த்தமிழே அவர்முடியை உனக்குத்தான் சாய்ப்பார் – கவிஞர் கண்ணதாசன் பாடினார்.
———————————————————————————————————————————————————————————————————–
- வளையாத முடியசரன் வைரத் தூண்தான் வளமார்ந்த பெரியாரின் கொள்கை வாள்தான்தலையறுத்துத் தமிழ்ப்பகையின் தலை யறுக்கும் தளைதட்டா வெண்பாக்கள் இவரின் தோட்டாகுலைஇளநீர் கொட்டியதாய் இனிமைப் பேச்சு குடியறியாச் சிந்தனைகள் தமிழே மூச்சுஅலைகடலாய் கருத்துமனம் பெரியார் அண்ணா ஆழ்மனத்தில் வைத்திருந்த புதையல் காடுஎவரெவரோ எழுதுகின்றார் இவரைப் போன்றே
எழுந்தவர்யார் எழுத்தாலோ? பாவேந்தர்தம்
தவப்புதல்வர் தமிழ்ப்புலவர் இவரின் பாட்டு
தன்மான இயக்கத்தின் தளர்தா லாட்டு
யுகப்புரட்சி எழுத்தாளர் தமிழர் கைக்கு
உயிர்நூற்கள் படைப்பாளர் உன்றன் தொண்டை
அகங்குளிர நினைக்கின்றேன் உருவம் கூட
அகலவில்லை அடடாநீ எங்கே போனாய்? – உவமைக்கவிஞர் சுரதா பாடினார்.
————————————————————————————————————————————————————————————————————-
- ‘கொட்டிக் கொடுத்தாலும் கோமான்கள் அழைத்தாலும்எட்டியே பார்க்காத இளம்போத்துச் சிங்கமாய்அட்டியின்றி பணத்தாசை அணுவளவும் இல்லாமல்சுட்டி உரைக்கும் சுடர்க்கவியாய் கவியுலகில்பாடிப்பறந்த பறவையாம் கவியரசர் முடியரசர்’ – தமிழாகரர் தெ. முருகசாமி பாடினார்.
- ————————————————————————————————————————————————————————————————————
கவிஞர் முடியரசன் பாடல்
கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை
மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி
ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற
பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான் ,
மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல்
நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன்அவன்,
ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான்
சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான்
முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள்
எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற்,
பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால்
கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான் ,
அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள்
அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்
இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது
பாடலின் பொருள்:
தமிழன் கற்களும், முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பை திருத்தி பண்படுத்தினான். தனது உடல் வலிமையால் வளத்தை பெருக்கினான். ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையை பெற்றான். முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என் நிலத்தை நான்கு வகைப்படுத்திய நாகரிக மனிதன் அவன் பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களில் எளிதாக வெற்றி கண்டான். பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றி கொடியை நாட்டினான். முத்து, ஏலம், மிளகு ஆகியவற்றைக் வணிகம் நோக்குடன் கப்பலில் கண்டங்களைச் சுற்றி வந்தான். எதற்கும் அஞ்சுவான் ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான்.
யார் கவிஞன்?
காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்;
கைம்மாறு விழைந்துபுகழ் பெறுதல் வேண்டி
மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை
மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்;
தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி விட்டுத்
தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்;
மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு
மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்;
ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவ ரேனும்
ஆள்கஎனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்;
மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது
காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக்
கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்;
தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்
தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன். * – முடியரசன்
பொருள்: செல்வத்துக்காகவும் பயனும் புகழும் கருதியும் குற்றமில்லாத கொள்கைக்கு மாறாக மனச்சான்றை மறைத்தும், தன்னலத்துக்காக நாடு, இனத்தை இழிவுபடுத்திக் கூழுக்கும் மீசைக்கும் ஆசைப்படுபவராய், தகுதியற்றவரை வலிந்து போற்றிச் செல்வம் திரட்டப் பாடுபவன் கவிஞன் அல்லன்.
ஆட்சியாளரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், எவர் ஆண்டாலென்ன என இருந்துவிடாமல், தன் நாட்டின் மேன்மைக்குக் குரல் கொடுப்பவனே கவிஞன் ஆவான். கொடுமைகளைக்கண்டு மனங்கொதித்துப் புலியாகி, அக்கொடுமைகள் நீங்குமாறு பாடல்கள் தீட்டுவோனே கவிஞன் ஆவான். எதற்கும் தலைவணங்கும் அடிமையாகாமல், மக்களின் தலைவனாகத் தன்னை எண்ணிப் பாடுபவனே உண்மை மறவன்; அவனே கவிஞன்.
சொற்பொருள் : கைம்மாறு – பயன்; மாசற்ற – குற்றமற்ற; தேட்டையிட – செல்வம் திரட்ட; மீட்சி- மேன்மை; மாள – நீங்க.