Blog

சுரதா

FiNqUMFacAAyWcO
Old Syllabus

சுரதா

சுரதா

ஆசிரியர் குறிப்பு

இயற்பெயர் இராசகோபாலன்
பெற்றோர் திருவேங்கடம்-செண்பகம் அம்மையார்
ஊர்  தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்)
காலம் 23.11.1921 – 20.06.2006
துணைவியார் சுலோசனா

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். இவர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் . பாரதிதாசனின் இயற்பெயர்சுப்புரத்தினம்’. எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும். உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர். அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லைஎன்ற இவரது வரிகள் மிகவும் புகழ்பெற்றது.

சுரதாவின் படைப்புகள்

  1. தேன்மழை (கவிதைத் தொகுப்பு, 1986)
  2. துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)
  3. சிரிப்பின் நிழல் (பாடல் தொகுப்பு)
  4. சிக்கனம்
  5. சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)
  6. அமுதும் தேனும், 1983
  7. பாரதிதாசன் பரம்பரை(தொ.ஆ), 1991
  8. வினாக்களும் சுரதாவின் விடைகளும்
  9. நெய்தல் நீர்
  10. உதட்டில் உதடு
  11. எச்சில் இரவு
  12. எப்போதும் இருப்பவர்கள்
  13. கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
  14. சாவின் முத்தம் (சுரதாவின் முதல் நூல்)
  15. சிறந்த சொற்பொழிவுகள்
  16. சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)
  17. சொன்னார்கள்
  18. தமிழ்ச் சொல்லாக்கம்
  19. தொடாத வாலிபம்
  20. நெஞ்சில் நிறுத்துங்கள்
  21. பட்டத்தரசி,(பாவியம்) 1957; முத்துநூலகம். 8 ஜி, பைகிராப்ட்ஸ் சாலை. சென்னை-5
  22. பாவேந்தரின் காளமேகம்
  23. புகழ்மாலை
  24. மங்கையர்க்கரசி
  25. முன்னும் பின்னும்
  26. வார்த்தை வாசல்
  27. வெட்ட வெளிச்சம்
  28. முன்னுரை ஊர்வலம்; மணிவாசகர் பதிப்பகம்
  29. சொல்லடா (கவிதை)
பெற்ற சிறப்புகள்
  • 1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
  • 1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • 1978 இல்ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது (2007).
  • 1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.
  • 1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.
  • 1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.
  • 1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.
  • 1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.
  • சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம்இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • 29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச் சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.
  • பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.
  • படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.
  • அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார்.
  • புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த தலைவன் இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்
  • மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார்.  சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், ‘அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு’, மற்றும் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா’ ஆகியவை. 100 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.

பாடல்

கார்த்திகை தீபமெனக்

காடெல்லாம் பூத்திருக்கும்   

பார்த்திட வேண்டுமடீ – கிளியே

பார்வை குளிருமடீ!

காடு பொருள்கொடுக்கும்

காய்கனி ஈன்றெடுக்கும் 

கூடிக் களித்திடவே – கிளியே

குளிர்ந்த நிழல்கொடுக்கும்

குரங்கு குடியிருக்கும்

கொம்பில் கனிபறிக்கும் 

மரங்கள் வெயில்மறைக்கும் – கிளியே

வழியில் தடையிருக்கும்

*பச்சை மயில்நடிக்கும்

பன்றி கிழங்கெடுக்கும்

 நச்சர வங்கலங்கும் – கிளியே

நரியெலாம் ஊளையிடும்

அதிமது ரத்தழையை

யானைகள் தின்றபடி 

புதுநடை போடுமடீ – கிளியே

பூங்குயில் கூவுமடி!

சிங்கம் புலிகரடி

சிறுத்தை விலங்கினங்கள் 

எங்கும் திரியுமடீ – கிளியே

இயற்கை விடுதியிலே!

 பாடலின் பொருள்

கார்த்திகை விளக்குகள் போலக் காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும். அவற்றைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும். காடு பல வகையான பொருள்களைத் தரும். காய்கனிகளையும் தரும். எல்லாரும் கூடி மகிழ்ந்திடக் குளிர்ந்த நிழல் தரும். அங்கே வசிக்கும் குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள, கனிகளைப் பறித்து உண்ணும். மரங்கள் வெயிலை மறைத்து நிழல் தரும். அடர்ந்த காடு வழிச்செல்வோர்க்குத் தடையாய் இருக்கும்.

பச்சை நிறம் உடைய மயில்கள் நடனமாடும். பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும். அதனைக்கண்டு நஞ்சினை உடைய பாம்புகள் கலக்கமடையும். நரிக் கூட்டம் ஊளையிடும். மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடை போடும். பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும். இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் எங்கும் அலைந்து திரியும்.

 

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories